Sunday, January 22, 2017

#ஜல்லிக்கட்டு புரிந்து கொள்வோம்! காப்போம்! #jallikattu

@periyastar ன் ஆங்கில டூலாவின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.

மொழியாக்கம்: எ.அ.பாலா (@ammu_maanu)

#ஜல்லிக்கட்டு புரிந்து கொள்வோம்! காப்போம்! #jallikattu

தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை, தமிழர்களின் ஒரு பிரச்சினையாக, தமிழரின் பாரம்பரிய/தொன்மையான விளையாட்டு குறித்த ஒரு பிரச்சினையாக எண்ணிக் கொண்டிருக்கும் எனது தமிழ் மற்றும் பிறமொழி நண்பர்களுக்காக இதை எழுதுகிறேன்.

ஜல்லிக்கட்டு பற்றிய பிரச்சினையை ஆராய்வதற்கு முன், பிற மாநிலங்களில் இருந்து வரும் காளை தொடர்பான பிரச்சினைகளை தெரிந்து கொண்டால், ஜல்லிக்கட்டு ஒரு மாநிலப் பிரச்சினை மட்டும் அல்ல என்பது புரியும்.

குஜராத் நிலவரம்:
அதிக பால் தரும் அம்மண்ணின் கிர் வகைப் பசுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவதால், குஜராத் அரசு பிரேசில் நாட்டிலிருந்து கிர் எருதுகளின் விந்தை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது. இவ்வகை கிர் எருதுகள், பவநகர் மகாராஜா சுதந்திரத்துக்கு முன் பிரேசிலுக்குப் பரிசாக வழங்கிய எருதுகளின் பிறப்பின் வழி வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


கேரளா நிலவரம்:
ஜெர்சி மற்றும் சுவிஸ் நாட்டுக் காளைகளுடன் கலப்புப் புணர்ச்சியால், வெச்சூர் பசுக்கள் தங்கள் தனி/நற்தன்மையை இழந்து விட்டன.


பஞ்சாப் நிலவரம்:
பஞ்சாப் மாடு ஆய்வாளர்கள், பிரேசில் நாட்டில் உள்ள இந்திய வம்சாவழி மாடுகள் பற்றி ஆராய்வதற்கு பயணம் மேற்கொள்ளப் போவதாக ஒரு செய்தி வந்துள்ளது.

கர்னாடகா மற்றும் மகாராட்டிர மாநிலங்களின் தியோனி வகை மாடுகள் அழிவின் விளிம்பில் உள்ளன.


ஆக, இது மொத்த இந்தியாவுக்குமான ஒரு முக்கியப்பிரச்சினை என்று புரிகிறதல்லவா?

http://4.bp.blogspot.com/-NlFExjhAdO8/TxKgJCjvWHI/AAAAAAAAHPQ/fVnSomYYcfg/s400/Jallikattu%2Bbull%2Bfestival%2B%25283%2529.jpg

#ஜல்லிக்கட்டு என்பது ஒரு பாரம்பரிய நிகழ்வாக பண்டைய இந்து சமவெளி நாகரீகத்திலிருந்து தொடர்ந்து வருவதை இந்து நாளிதழ் இடுகை சுட்டிக் காட்டுகிறது.

A2 வகைப் பாலில் (இது இந்திய மற்றும் ஆப்பிரிக்க வகைப் பசுக்கள் தருவது) உள்ள புரதச்சத்தின் மேன்மை, நன்மைகள் A1  வகைப் பாலில் (இது ஜெர்சி மற்றும் கலப்புப் புணர்வில் பிறந்த பசுக்கள் சுரப்பது) இல்லை என்பதை இந்த  இடுகையை வாசித்தால் உணரலாம்

சரி, எதற்கு காளையுடன் மல்லு கட்ட வேண்டும்? அவற்றுக்கோ நமக்கோ வேறு வேலையில்லையா?

பசுக்களே பால் தருவதால், அதன் வழி பலன் இருப்பதால், ஒரு விவசாயி காளையை விட பசு வளர்ப்பதையே அதிகம் விரும்புவார் என்பது யதார்த்தமே. ஏர் உழவும், வண்டி இழுக்கவும் பயன்படும் காளைகள் ஆண் தன்மை நீக்கப்பட்டவை (அதனால் அவற்றைக் கட்டுப்படுத்துவது எளிது) என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், டிராக்டர்களும், எரிபொருள் வண்டிகளும் உள்ள காலத்தில், காளைகளை வளர்ப்பதில் பயன் எதுவும் இல்லை. விவசாயிகள் ஏன் அவற்றை வளர்க்க வேண்டும்? பரிசுகளுடன் கூடிய#ஜல்லிக்கட்டு ரேக்ளா பந்தயம் போன்றவை இருப்பதால், புணர்ச்சிக்கு வேண்டிய  நல்ல உடல் நலத்துடன் ஆன காளைகளை வளர்க்க, விவசாயிகளுக்கும் ஊக்கம் கிடைக்கிறதல்லவா! காளைகளை பந்தயத்துக்குத் தயார்ப்படுத்த விவசாயிகள் ஆண்டு முழுதும் அவற்றை நன்கு பராமரிக்கின்றனர்.  அதனால், முக்கியமான நன்மை விளைகிறது. #ஜல்லிக்கட்டு காளைகளுடன் புணர்வதால், பசுக்களின் வம்சாவழி கன்றுகள் ஆரோக்கியமும், வலிமையும் கொண்டவையாக பிறக்கின்றன.

சரி, விளையாட்டு என்று சொல்லிவிட்டு ஏன் காளைகளைத் துன்புறுத்த வேண்டும்?

#ஜல்லிக்கட்டு க்கென்று விதிகள் உண்டு. வாசிக்க:

விளையாட்டின் போது காளைக்கு (மனிதர்க்கு அல்ல) அடிபட்டால், விளையாட்டு உடனடியாக நிறுத்தப்படும். சில சமயங்களில் காளைகளுக்கு வெறி ஏற்ற மிளகாய் பொடி, சாராயம் பயன்படுத்தப்பட்டதை மறுக்க முடியாது. அது கண்டனத்துக்குரியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், 2008-லிருந்து, அரசுக் கட்டுப்பாடுகள் நிலுவைக்கு வந்த பின், மாவட்ட கலெக்டர் மற்றும் மிருக நல வாரிய உறுப்பினர்கள் முன்னிலையில் தான் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக் காளைகளின் மற்றும் போட்டியில் பங்கு பெறுபவர்களின் உடல் நலம் குறித்து மருத்துவர்கள் ஆய்ந்து சான்றிதழ் வழங்கிய பின்னரே இது நடைபெறுகிறது.

எல்லாம் சரியாகவே உள்ளது. பின் ஏன் #ஜல்லிக்கட்டு க்குத் தடை?

இந்தியாவின் பால் சந்தை நமது சர்க்கரைச் சந்தையை விட பெரியது என்பது ஒரு தகவல்! 125 கோடி மக்கள் தொகை உடைய, 50% மாமிசம் உண்ணாத மக்கள் கொண்ட ஒரு நாட்டில், புரதம் என்பது பால் என்பதிலிருந்து தான் வரவேண்டும். மேற்கத்திய நாடுகள் இந்தச் சந்தை வாய்ப்பை உணர்ந்து கொண்டன. மஞ்சள், மிளகுக்கு அமெரிக்கா காப்புரிமை வைத்துள்ளதைத் தொடர்பு படுத்திப் பார்த்தால், அந்த நாடுகளின் நோக்கம் எளிதாகப் புரியும்.

ஆம், அயல் நாட்டுச்சக்திகள் சரியான திட்டமே வகுத்துள்ளன. இத்தகைய ஜனத்தொகை கொண்ட ஒரு நாடு, பாலுக்குத் தங்களை நம்பி இருக்கும் சூழ்நிலையை உருவாக்குவதே அவர்களின் “சீரிய” திட்டம். பாலுக்குக் காப்புரிமை பெற இயலாது. வேறென்ன செய்யலாம்? இந்திய மண்ணின் பாரம்பரிய இனக் காளைகள்-பசுக்களின் சேர்க்கையை இல்லாமல் ஆக்குவது. இதை இன ஒழிப்பு (Genocide) என்று கூடச் சொல்லலாம்.  ஆக, மண்ணின் காளைகள் மொத்தமாக அழியவேண்டும் என்பதே குறிக்கோள்.

இதற்காக, ஆலோசித்து இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுத்தனர்.

1.  மண்ணின் எருதுகளின் பயன்களை விவசாயிகளுக்கு இல்லாமல் ஆக்குவது என்பது ஒரு எளிய வழி. பொருளாதார வழிவகை இல்லாத நிலையில் விவசாயிகள் காளைகளை பராமரிக்க இயலாதில்லையா? முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்தியாவின் 68% பாரம்பரிய இனக் காளைகள் சிறு விவசாயிகளிடம் உள்ளன. இவ்வழியில் இவர்களே அயல் நாட்டுச்சக்திகளின் இலக்கு.

2. அதிக (ஆனால் A1 வகை) பால் தரும் ஜெர்சி பசுக்களை விற்பதாக விவசாயிகளுக்கு ஆசை காட்டுவது ஒரு வழி. மெல்ல இந்த ஜெர்சிப் பசுக்கள் பாரம்பரிய இனப் பசுக்களுக்கு பெருமளவில் மாற்று எனும் நிலை வரும்போது, ஜெர்சி இனக் காளைகளின் விந்துக்கு (செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்க) மேற்கத்திய நாடுகளையே அண்ட வேண்டிய சூழல் உருவாகி விடும். அவர்கள் சொல்வது தான் விலை. அந்த நாடுகளை அண்டிப் பிழைக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவோம் என்பதில் ஐயமில்லை.  இந்த ஏற்பாட்டுக்கு ஏதுவாக, வெண்புரட்சி (White Revolution) என்ற பெயரில், நமது மத்திய/மாநிலஅரசாங்கங்கள் துளியும் சிந்திக்காமல் செயல்படுகின்றன.

இவ்வழியில், நமது பால் சந்தையை மேற்கத்திய நாடுகள் கைப்பற்றுவதுடன், A1 ரக பால் ஏற்படுத்தும் மருத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி, மருந்து தயாரிக்கும் பன்னாட்டு கம்பெனிகளை நாம் சார்ந்திருக்க வேண்டிய அபாயமும் உள்ளது, அவர்களுக்கோ மற்றுமொரு பணம் ஈட்டும் வாய்ப்புக்கான வழி பிறக்கிறது.

முடிவு என்ன?

இந்த 2 இடுகைகளின் (இடுகை1 இடுகை2) சாராம்சமான செய்தி, நமது பாரம்பரிய இனப் பசுக்கள் மற்றும் காளைகளின் பேரழிவு, என்பது தான்.

#ஜல்லிக்கட்டு என்ற பாரம்பரிய விளையாட்டை, தமிழ் பண்பாட்டுக் கூற்றை தடை செய்வதால் ஏற்பட வல்ல பாதகத்தை, முடிந்த அளவில் இவ்விடுகையில் கூறியிருக்கிறேன். பலரும் வாசித்து புரிதல் பெற, இவ்விடுகையை, முடிந்த அளவு பகிரவும். மேலும், இது தமிழர் சார்ந்த பிரச்சினை மட்டுமே அல்ல என்பதையும் புரிந்து கொள்க. ஆங்கில டூலாவையும் விரிவாகப் பகிர்தல் நல்லது.

#SaveJallikattu #NotJustForTamilnadu

நன்றி

--- எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails